குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 12,691 பேர் கைது


குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 12,691 பேர் கைது
x

குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 12,691 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

குண்டர் தடுப்பு சட்டம்

திருச்சி மாவட்டத்தில், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில், கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள், குற்றவழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடந்த ஆண்டில்(2022) 62 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டை விட கூடுதலாகும். பொது இடங்களில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொலை குற்றங்களுக்கு எதிராக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கடந்த 2021-ம் ஆண்டில் நடைபெற்ற கொலை குற்றங்களை விட (44 வழக்குகள்), 10 கொலை குற்ற வழக்குகள் குறைவாகும். கஞ்சா விற்ற 128 பேர், புகையிலை மற்றும் குட்கா போதை பொருட்களை விற்ற 268 பேர் என மொத்தம் 446 ேபர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் வருவதை தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்னடத்தை பிணைய பத்திரம்

கடந்த ஆண்டு தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 163 பேர் மீதும், சட்டவிரோதமாக மது விற்ற 2,914 பேர் மீதும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 366 பேர் மீதும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 238 பேர் மீதும் என மொத்தம் 3,681 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5,027 ேபர் மீது உரிய சட்ட பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கான நன்னடத்தை பிணையம் பெறவேண்டி 2022-ம் ஆண்டில் 325 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, பிணைய பத்திரம் முடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயல்கள்

மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு திருட்டு குற்றங்கள் சம்பந்தமாக 561 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 308 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, இதில் 56 சதவீதம் திருட்டு போன சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றம் மூலமாக உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளை விட கடந்த ஆண்டில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன.

மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள், போதை பொருள் விற்பனை செய்பவர்கள், வழிப்பறி குற்றவாளிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய, சட்டரீதியான, கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு 2022-ம் ஆண்டில் 3,057 மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்கள் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து, 2022-ம் ஆண்டு 4,083 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 28 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அரசின் வழிகாட்டுதல்களின்படி உரிய பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஆண்டு(2023) நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு குறித்து மாவட்ட நிர்வாகம் தலைமையில் வழிகாட்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசால் வெளியிடப்பட்ட நிலையான செயல் திட்டம் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.


Next Story