ரூ.127 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
தென்காசிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந் தேதி வருகை தரும்போது ரூ.127 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்
தென்காசிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந் தேதி வருகை தரும்போது ரூ.127 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
8-ந் தேதி வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தென்காசி வருகிறார். இதனை முன்னிட்டு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆகாஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், தனுஷ்குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மைக்கேல் ஆண்டனி பெர்னான்டோ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் அனைத்து துறை முதல்நிலை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ரூ.127 கோடி நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக வருகிற 8-ந் தேதி வருகிறார். இதில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ.127 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 1 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது.
அவர் தென்காசி மாவட்டத்தின் மீது தனி கவனம் செலுத்தி இந்த மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
தனி கவனம்
எனவே இந்த விழா சிறப்பாக நடைபெறும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில் தனி கவனம் செலுத்தி ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் தென்காசி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத்தலைவர் சுப்பையா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.