128 வகையான பறவை இனங்கள் உள்ளன

நாமக்கல் மாவட்டத்தில் நிலத்தில் வாழும் தன்மை கொண்ட 128 வகையான பறவை இனங்கள் இருப்பது வனத்துறை கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.
பறவைகள் கணக்கெடுப்பு பணி
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.
நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக ஜனவரி மாதம் 28 மற்றும் 29-ந் தேதிகளில் நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஜேடர்பாளையம், இடும்பன்குளம், தூசூர், வேட்டாம்பாடி, பருத்திப்பள்ளி, தும்பல்பட்டி, புதுச்சத்திரம், கோனேரிப்பட்டி, நாச்சிபுதூர் உள்ளிட்ட 8 ஏரிகளில் இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஊசிவால் வாத்து, தட்டைவாயன், வெண்புருவ வாத்து, கிளுவை, மண்கொத்தி, ஆற்று மண்கொத்தி, காட்டு கீச்சான், சாம்பல் கொக்கு, நத்தை குத்தி நாரை, சங்குவளை நாரை, பவளக்கால் உள்ளான் உள்ளிட்ட 110 வகைகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக 38 புதிய வகை நீர்ப்பறவை இனங்கள் கண்டறியப்பட்டன.
128 வகையான பறவைகள்
தற்போது இரண்டாம் கட்டமாக நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி, கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், கொல்லிமலை, காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, போதமலை, நைனாமலை, நடுக்கோம்பை, வரகூர், புளியஞ்சோலை, பி.மேட்டூர், எருமப்பட்டி உள்ளிட்ட 20 வனப்பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மேற்பார்வையில் நடந்த இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர், பறவைகள் ஆர்வலர்கள் என சுமார் 80 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் 20 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் என மொத்தம் 128 வகையான பறவை இனங்கள் இருப்பது தெரிய வந்து உள்ளது. இந்த கணக்கெடுப்பின் போது மாவட்டத்தில் மொத்தம் 4,296 பறவைகள் பதிவாகி இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






