சரக்கு ரெயிலில் வந்த 1,281 டன் உரம்


சரக்கு ரெயிலில் வந்த 1,281 டன் உரம்
x

தூத்துக்குடியில் இருந்து பழனிக்கு சரக்கு ரெயிலில் 1,281 டன் உரம் வந்தது.

திண்டுக்கல்

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு சாகுபடி நடைபெறுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் பயிர் சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்களை இருப்பு வைக்க மாவட்ட வேளாண் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடிக்காக யூரியா-2,397 டன், டிஏபி-691 டன், பொட்டாஷ்- 701 டன், காம்ப்ளக்ஸ் -4,034 டன், சூப்பர் பாஸ்பேட் -714 டன் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு கூடுதலாக யூரியா, காம்ப்ளக்ஸ் ஆகிய உரம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் பழனிக்கு 965 டன் யூரியா, 316 டன் காம்ப்ளக்ஸ் உரம் கொண்டு வரப்பட்டது.

இதில் 758 டன் யூரியா, 264 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரம் லாரிகள் மூலம் திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு 207 டன் யூரியா, 52 டன் காம்ப்ளக்ஸ் உரம் லாரிகளில் அனுப்பப்பட்டது. முன்னதாக உரம் அனுப்பும் பணிகளை, மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story