12-ம் நூற்றாண்டு மலைய மன்னன் சிற்பம் கண்டுபிடிப்பு


12-ம் நூற்றாண்டு மலைய மன்னன் சிற்பம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2022 6:45 PM GMT (Updated: 8 Nov 2022 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே மாரங்கியூரில் 12-ம் நூற்றாண்டு மலைய மன்னன் சிற்பம் கண்டுபிடிப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே மாரங்கியூர் கிராமம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் ஆய்வு செய்த போது கி.பி.12-ம் நூற்றாண்டை சேர்ந்த மலைய மன்னரின் சிற்பம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறும்போது, மாரங்கியூர் ராமலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சிற்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் சுமார் 2 அடி உயரமுள்ள சிற்பம் ஒன்று கைகளைக்கூப்பி வணங்கிய நிலையில் காணப்படுகிறது. இந்த சிற்பம் சாமி சிலை(அனுமன்?) என வணங்கப்பட்டு வருகிறது. ஆனால் இது மன்னர் ஒருவரின் சிற்பம் ஆகும். கிளியூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர் குலோத்துங்க சோழ சேதிராயர். இவரது மகன் எதிரிலி சோழ வாண குலராயன். வாணகப்பாடி நாட்டின் தலைவராக விளங்கிய இவர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் இருக்கும் சிவாலயங்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கது மாரங்கியூரில் இருக்கும் சிவாலயம். தனது ஆட்சிக்காலத்தில்(கி.பி.1136) நிலங்களை இந்தகோவிலுக்கு தானமாக வழங்கி அதற்கு வரிவிலக்கும் செய்திருக்கிறார். மேலும் அம்மனின் திருமேனியையும் நிறுவியிருக்கிறார். இத்தகவல்களை கோவிலில் இருக்கும் குலோத்துங்க சோழன்கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. எதிரிலி சோழவாண குலராயன் உருவச்சிலை, கோவில் வளாகத்தில் நிறுவப்பட்டு இருக்கிறது. தலையில் நீண்ட கேசம், காது, கழுத்து, கைகளில் அணிகலன்கள், இடுப்பில் வாள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நெய்வனை கிராமத்தில் இருந்த மலைய மன்னர்களின் சிற்பங்களை இந்த சிற்பம் ஒத்திருக்கிறது. கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த மன்னரின் சிற்பத்தை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என கிராம மக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்புப்படை அகிலன், வக்கீல் சாரதி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story