கார் டிரைவரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி


கார் டிரைவரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையை சேர்ந்த கார் டிரைவருக்கு பரிசு விழுந்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பி ரூ.13¼ லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்


கோவையை சேர்ந்த கார் டிரைவருக்கு பரிசு விழுந்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பி ரூ.13¼ லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்

கோவையில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. என்ன தான் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களின் ஆசைகளை தூண்டி எளிதாக பணத்தை மோசடி செய்து வருகின்றனர்.

இப்படி தான் கோவையில் டிரைவர் ஒருவருக்கு கார் பரிசு விழுந்திருப்பதாக மெசஜே் (குறுஞ்செய்தி) அனுப்பி ரூ.13¼ லட்சத்தை மர்ம ஆசாமிகள் மோசடி செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கார் டிரைவர்

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). கார் டிரைவர். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்களுக்கு விலை உயர்ந்த கார் ஒன்று பரிசாக விழுந்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை நம்பிய சசிக்குமார் அந்த குறுஞ்செய்தியில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம ஆசாமி உங்களுக்கு விலை உயர்ந்த கார் பரிசாக விழுந்து உள்ளது. எனவே இந்த காரை பரிசாக பெற வேண்டும் என்றால் அதற்கு ஜி.எஸ்.டி., ஆர்.பி.ஐ. கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டும். அதற்கான பணத்தை நீங்கள் முதலில் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்று அந்த மர்ம ஆசாமி தெரிவித்தார்.

மோசடி

இதனை உண்மை என்று நம்பிய சசிகுமார், அந்த மர்ம ஆசாமி கூறிய வங்கி கணக்கு எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பல்வேறு தவணைகளாக ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் செலுத்தினார். பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம ஆசாமி கார் உள்ளிட்ட எவ்வித பரிசு பொருளையும் சசிகுமாருக்கு வழங்க வில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சசிகுமார் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருண், சப்-இன்ஸ்பெக்டர் சிவராபாண்டியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, பரிசு பொருட்கள் விழுந்து இருப்பதாக வரும் குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். மேலும் சம்பந்தப்பட்ட நபரை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் பணத்தை வழங்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.


Next Story