அரசு பஸ் கவிழ்ந்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 13 பேர் படுகாயம்
மணப்பாறை அருகே அரசு பஸ் கவிழ்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
மணப்பாறை அருகே அரசு பஸ் கவிழ்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டு பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 33 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் தியாகராஜன் (வயது 37) ஓட்டி வந்தார். கண்டக்டர் பணியில் கந்தசாமி (56) இருந்தார்.
இந்த பஸ் நேற்று அதிகாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு கட்டையில் (சென்டர் மீடியன்) மோதியது. பின்னர் தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோரத்தில் கவிழ்ந்தது.
13 பேர் காயம்
இந்த விபத்தில் டிரைவர் தியாகராஜன், கண்டக்டர் கந்தசாமி, பழனியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் (58), சென்னையை சேர்ந்த சையத் அப்ரீத் (19), பாட்ஷா (21), ஜெகநாதன் (65), கபாலி (40), மாரிமுத்து (57), முருகன் (46), ரவி (65) உள்பட 13 பேர் படுகாயம் அடைந்து கூச்சலிட்டனர்.
பயணிகளின் சத்தம் கேட்டு அப்பகுதியினர் விரைந்து வந்து மீட்க முயன்றனர். ஆனால் பஸ்சின் முழுவதும் அடைப்பு இருந்தது. இதனால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட பொதுமக்கள் பஸ்சின் மேற்கூரையை உடைத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மணப்பாறை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கவிழ்ந்த பஸ்சை அப்புறப்படுத்தினர். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.