மளிகை கடைக்காரர் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு


மளிகை கடைக்காரர் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு
x

அரவக்குறிச்சி அருகே மளிகை கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கரூர்

மளிகை கடைக்காரர்

அரவக்குறிச்சி அருகே சீத்தப்பட்டி காலனியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 55). இவர் சீத்தப்பட்டி அருகே மலைக்கோவிலூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஜெயமணி (45) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். மகன் படித்து முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்கிறார். மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

சக்திவேல் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் மளிகை கடைக்கு சென்று விட்டார். மதியம் உணவு உண்பதற்காக சக்திவேல் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

13 பவுன் நகைகள் திருட்டு

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக்திவேல் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த தங்க செயின், மோதிரம், தோடு உள்பட மொத்தம் 13 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கரூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story