13 வயது முதல் 5 ஆண்டுகள்... 8 முறை...! சிறுமியின் கருமுட்டை விற்பனை...! சிக்கலில் தனியார் மருத்துவமனைகள்?


13 வயது முதல் 5 ஆண்டுகள்... 8 முறை...!  சிறுமியின் கருமுட்டை விற்பனை...!  சிக்கலில் தனியார் மருத்துவமனைகள்?
x

ஒவ்வொரு முறை அந்த சிறுமி கருமுட்டை கொடுத்தவுடன் அந்த சிறுமியின் தாய்க்கு ரூ.20 ஆயிரமும், புரோக்கர் மாலதிக்கு ரூ. 5 ஆயிரம் கமிஷனாக ஆஸ்பத்திரி சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

ஈரோடு:

ஈரோட்டில் 16 வயது சிறுமியுடன் வசித்து வந்த பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். பின்னர் அந்த பெண்ணிற்கு பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து வசித்து வந்தார்.

இந்நிலையில் அந்தப் பெண் கருமுட்டை கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்போது அவருக்கு கருமுட்டையை கமிஷன் அடிப்படையில் கொடுக்கும் புரோக்கர் மாலதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது மாலதி உங்களது மகள் மூலமும் கருமுட்டையை கொடுத்து நிறைய சம்பாதிக்கலாம் என்று அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தையான பெயிண்டர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

கருமுட்டையை ஆஸ்பத்திரிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்து உள்ளார். இதற்காக அந்த சிறுமியின் வயதை அதிகரித்து காட்டுவதற்காக போலி ஆதார் அட்டை தயாரித்து கருமுட்டையை அந்த சிறுமியிடம் இருந்து எடுத்துள்ளனர்.

போலி ஆவணத்தை ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான் (25) என்பவர் தயாரித்துக் கொடுத்துள்ளார். ஈரோடு, சேலம், ஓசூர் உள்பட பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் அந்த சிறுமியை அவரது தாய் மற்றும் வளர்ப்புத் தந்தை அழைத்துக் கொண்டு 8 முறை கருமுட்டை எடுத்துள்ளனர்.

ஒவ்வொரு முறை அந்த சிறுமி கருமுட்டை கொடுத்தவுடன் அந்த சிறுமியின் தாய்க்கு ரூ.20 ஆயிரமும், புரோக்கர் மாலதிக்கு ரூ. 5 ஆயிரம் கமிஷனாக ஆஸ்பத்திரி சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பணத்தை கொண்டு சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். தொடர்ந்து கருமுட்டை கொடுத்ததால் சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் வளர்ப்புத் தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததால் சிறுமி அவர்களிடமிருந்து தப்பித்து சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

உறவினர்களிடம் நடந்த விஷயத்தை கூறி கதறி சிறுமி அழுது உள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, அவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் ஏற்கனவே போக்சோ உள்பட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவத்தில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் சென்னையில் உள்ள மருத்துவ பணிகள் இயக்குனரகத்தின் துணை இயக்குனர் குருநாதன், இணை இயக்குனர் (சட்டம்) விசுவநாதன், ஈரோடு மருத்துவ பணிகள் துணை இயக்குனர் கோமதி, மகப்பேறு டாக்டர்கள் மலர்விழி, கதிரவன் உள்பட 6 பேர் கொண்ட குழுவினர் ஈரோட்டுக்கு வந்தனர்.

சிறுமி மனநல ஆலோசனை வழங்கப்பட்டு அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். மருத்துவ குழு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த மருத்துவக் குழுவிடம் கண்ணீர் மல்க கூறினார்.

முதலில் அந்த சிறுமி என்ன கூறினார் என்ற தகவல் வெளிவரவில்லை. தற்போது அந்த சிறுமி மருத்துவக் குழுவிடம் கூறிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் தனது தாய் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக தனது வளர்ப்புத் தந்தை உடன் சேர்ந்து தனக்கு பல வகையில் தொல்லை கொடுத்துள்ளார்.

குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக கருமுட்டை விற்பனைக்காக வளர்ப்பு தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருவனந்தபுரம், திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் 8 முறை தன்னிடமிருந்து கருமுட்டை எடுக்கப்பட்டதாகவும், கருமுட்டை எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட்டது என்ற விவரத்தையும் அந்த சிறுமி கூறி அழுதுள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட மருத்துவக்குழு விசாரணையை தீவிரப்படுத்தியது. பின்னர் மருத்துவ குழு ஈரோடு, பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியது.

மருத்துவ குழுவினர் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர், ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கருமுட்டை தானம் எடுக்கும் முன்பு அரசு குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? எந்த சான்றிதழ் அடிப்படையில் சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுக்கப்பட்டது.

அந்த சிறுமிக்கு திருமணம் ஆகி விட்டதை உறுதி செய்தீர்களா? உட்பட பல்வேறு கேள்விகளை சரமாரியாக கேட்டனர். மேலும் அந்த சிறுமி தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று 2-வது நாளாக இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் மருத்துவ குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மற்றும் ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 2018ஆம் ஆண்டு முதல் எத்தனை பேருக்கு செயற்கை கருவூட்டல் நடந்தது என்பதை கண்டறிய அதன் ஆவணங்களை ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட மருத்துவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆவணங்கள் அடிப்படையில் கருமுட்டை எடுக்கப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இணை இயக்குனர் விஸ்வநாதன் கூறியதாவது:-

கருமுட்டை விற்பனை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நிறைவடைந்தும் அதன் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்படும். விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுமி வாக்குமூலம் படி ஆந்திரா, கேரளா மாநிலங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்க செய்த சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோர் 4 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இவர்களில் 4 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவ குழுவின் முழு விசாரணை முடிந்த பிறகு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story