வேலைநிறுத்த போராட்டத்தால் அரசுக்கு தினமும் ரூ.1,300 கோடி இழப்பு ஏற்படுவதாக கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது


வேலைநிறுத்த போராட்டத்தால் அரசுக்கு தினமும் ரூ.1,300 கோடி இழப்பு ஏற்படுவதாக கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது
x
தினத்தந்தி 29 Jun 2023 1:00 AM IST (Updated: 29 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

அரசுக்கு தினமும் ரூ.1,300 கோடி இழப்பு

கோயம்புத்தூர்

கோவை

வேலைநிறுத்த போராட்டத்தால் அரசுக்கு தினமும் ரூ.1,300 கோடி இழப்பு ஏற்படுவதாக கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

33 லட்சம் தொழிலாளர்கள்

கோவை மாவட்டத்தில் 130-க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிலையான சுரங்க கொள்கையை வகுக்க வேண்டும், கனிம மேலாண்மை திட்டத்தை உருவாக்கி குவாரி மற்றும் கிரஷர் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் கே.சந்திரபிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 7,150 பேர் ரூ.29 ஆயிரத்து 300 கோடி முதலீடு செய்து கல்குவாரி மற்றும் கிரஷர்களை நடத்தி வருகிறோம். இதில் 33 லட்சத்து 80 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள். முறையாக உரிமம் பெற்றுதான் நாங்கள் குவாரிகளை நடத்தி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் திடீரென்று வந்து ஆய்வு செய்கிறார்கள். இதனால் நாங்கள் மனதளவில் பெரும் பாதிப்படைந்து வருகிறோம்.

கட்டணத்தை செலுத்த தயார்

அதிகாரிகள், 2013-ம் ஆண்டுக்கு பின்னர் வந்த சட்டமுறையை கடைபிடிக்க சொல்கிறார்கள். அளவுக்கு அதிகமாக எடுத்ததற்கான கட்டணத்தை செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே அதற்கு அபராதம் இல்லாமல் செலுத்த வழிவகை செய்ய வேண்டும்.

நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக மிக முக்கியத்துறையாக கட்டுமானத்துறை இருக்கிறது. இதற்கு முதுகெலும்பாக இருப்பது குவாரி மற்றும் கிரஷர்தான். இது தற்போது அபாய நிலையில் இருக்கிறது. எனவே இதை தமிழக அரசு கவனிக்க வேண்டும்.

தினமும் ரூ.1,300 கோடி இழப்பு

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ரூ.3 ஆயிரத்துக்கு விற்ற ஜல்லியின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுமான பொருட்களின் விலை இருமடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு இருக் கிறது. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

மேலும் அரசுக்கு தினமும் ரூ.1,300 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தொழிலாளர்கள் மற்றும் எங்களின் நிலையை கவனத்தில் கொண்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கொசினா நிர்வாகி சகாயராஜ், கொபாகா நிர்வாகி ஜோசப் மற்றும் மைக்கேல், கிருஷ்ணசாமி, செல்வராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.



Next Story