சரக்கு வாகனத்துடன் 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 2 வாலிபர்கள் கைது
சரக்கு வாகனத்துடன் 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சோமரசம்பேட்டை அருகே எட்டரை கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருச்சி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதாவுக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் எட்டரை கிராமத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தில் இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தொட்டியத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 27), மண்ணச்சநல்லூரை சேர்ந்த நவீன்குமார் (22) என்பதும், வாகனத்தில் இருந்தது மணப்பாறையை சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண், எட்டரை பகுதியில் உள்ள வீடுகளில் சிறிது சிறிதாக வாங்கி சேர்த்து வைத்த ரேஷன் அரிசி என்பதும், 3 பேரும் சேர்ந்து அவற்றை மாட்டுத்தீவனத்துக்காக அதிக விலைக்கு விற்றுவந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோபாலகிருஷ்ணன், நவீன்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், சரக்கு வாகனத்தில் இருந்த 1,300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் பஞ்சவர்ணத்தை தேடி வருகிறார்கள்.