ரேஷன் அரிசி கடத்தியதாக இதுவரை 13 ஆயிரம் வழக்குகள் பதிவு - டாக்டர் ராதா கிருஷ்ணன் தகவல்


ரேஷன் அரிசி கடத்தியதாக இதுவரை 13 ஆயிரம் வழக்குகள் பதிவு - டாக்டர் ராதா கிருஷ்ணன் தகவல்
x

ரேஷன் அரிசி கடத்தியதாக இதுவரை 13 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் துறை முதன்மை செயலர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறினார்.

மதுரை,

திருப்பரங்குன்றத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரேஷன் கடைகளை புதுப்பிக்க முதல்-அமைச்சர் கூறி உள்ளார். 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. அதில் 25 ஆயிரம் நிரந்தர கடைகளும், 10 ஆயிரம் பகுதிநேர கடைகளாகவும் செயல்பட்டு வருகிறது. நம்ம ஊரு நம்ம ரேஷன் கடை திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 4 ஆயிரத்து 845 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடுமைப்படுத்தப்பட்டதால்தான் ரேஷன் அரிசி கடத்தல் என்ற செய்தி வருகிறது. இதுவரை ரேஷன் அரிசி கடத்திய 132 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 13 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடோனிலும் கண்காணிப்புகேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 5 ஆயிரம் கேமரா வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பெரும்பாலும் தரமான அரிசி வழங்கப்படுகிறது. பொங்கலுக்குகூட நல்ல அரிசி வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் குற்றச்சாட்டு வந்தால் உரிய பொருளை திரும்பி அனுப்புங்கள். தரமான நல்ல அரிசி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story