13,185 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்


13,185 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 13,185 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.

திருப்பத்தூர்

பிளஸ்-2 பொதுத்தேர்வு

பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று தமிழ் தேர்வு நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு 54 தேர்வு மையங்கள், தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வு மையங்கள் என மொத்தம் 56 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தேர்வு நடைபெற்றது.

59 அரசுப்பள்ளி மாணவர்கள், 25 நிதியுதவி பள்ளி மாணவர்கள், 50 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,461 மாணவர்களும், 6,724 மாணவிகள் என மொத்தம் 13,185 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.

தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஏற்படும் இடற்பாடுகளை தவிர்க்கவும், மாணவ, மாணவிகளின் உடல்நலன் சார்ந்த உபாதைகளை கண்காணிக்கவும் 56 தேர்வு மையங்களில் ஒரு கிராம சுகாதார செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் தேர்வு சம்பந்தமான முறைகேடுகளை தடுக்க 120 உறுப்பினர்களைக்கொண்ட பறக்கும்படை அமைத்து கண்காணிக்கப்பட்டது.

கலெக்டர் பார்வையிட்டார்

மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டார்.

முன்னதாக தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளிடம் அனைத்து கேள்விகளுக்கும் வார்த்தைகளை ரத்தின சுருக்கமாகவும், அழகாகவும், தொடக்கத்திலிருந்து முடிவு வரை கோர்வையாக தேர்வை எழுதி முடிக்க வேண்டும். ஒவ்வொரு வினாக்களுக்கு மத்தியில் இடைவெளி விட்டு எழுதுங்கள், கேள்வி எண்களை சரியாக எழுதுங்கள், நேரத்தை கடைபிடிப்பது மிக மிக முக்கியம். நன்றாக தெரிந்த வினாக்களை முதலில் எழுதுங்கள், அனைத்து கேள்விகளுக்கும் விடையளியுங்கள், அனைவரும் நன்றாக படித்து தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுரைகளை வழங்கினார்.

ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், தேர்வு மைய அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story