ஜல்லிக்கட்டுகளில் 1,325 காளைகள் சீறிப்பாய்ந்தன


ஜல்லிக்கட்டுகளில் 1,325 காளைகள் சீறிப்பாய்ந்தன
x

ஜல்லிக்கட்டுகளில் 1,325 காளைகள் சீறிப்பாய்ந்தன.

திருச்சி

மணப்பாறை:

ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே தெற்கு இருங்களூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டை லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல்முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் அதிகாரிகள் உறுதிமொழியை வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் வீரர்கள் தனித்தனி குழுவாக பிரித்து மைதானத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. பின்னர் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளம் காளையர்கள் விரட்டிப்பிடிக்க முயன்றனர். சில காளைகள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் நின்று விளையாடின. சில காளைகள் வீரர்களை பந்தாடின. இருப்பினும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் தப்பி ஓடின.

25 பேர் காயம்

காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சில்வர் பாத்திரம், கட்டில், பீரோ, சைக்கிள், ரொக்க பரிசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மொத்தம் 650 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர்.

காளைகள் முட்டியதில் திருச்சியை சேர்ந்த நந்தகுமார், திருமங்கலத்தைச் சேர்ந்த விக்னேஷ், கல்பாளையத்தைச் சேர்ந்த சிவசங்கர், லால்குடி சுகுமார், அரியலூர் ஆரோக்கியராஜ், லால்குடி நவீன்ஸ்ரீதர், பெரம்பலூர் சைமன் ராஜ், ஸ்டாலின் தாமஸ், நாமக்கல் காளிமுத்து, பள்ளிவிடை ஜெயக்குமார் உள்ளிட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என சுமார் 25 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 3 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ஜல்லிக்கட்ைடயொட்டி 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

என்.பூலாம்பட்டி

இதேபோல் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள என்.பூலாம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டையொட்டி நேற்று காலை வாடிவாசலுக்கு முன்பு ஊர் முக்கியஸ்தர்கள் தாரை, தப்பட்டை முழங்க வந்தனர். பின்னர் ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் வாடிவாசலில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

அப்போது களத்தில் நின்ற காளையர்கள், காளைகளுடன் மல்லுக்கட்டினர். காளையர்களை காளைகள் பந்தாடி, முட்டித்தூக்கி வீசின. மாடுபிடி வீரர்களும் விடாமல், காளைகளை அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், டி.வி., கட்டில், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள், ரொக்கம் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

32 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் மொத்தம் 675 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. 187 வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். காளைகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 4 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டையொட்டி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் மணப்பாறை துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story