ரெயில் மூலம் 1,331 டன் உரம் நெல்லை வந்தது
1,331 டன் உரம் ரெயில் மூலம் நெல்லைக்கு வந்தது.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஆற்றுப்பாசன பகுதிகளில் நெல் நடவு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மானாவாரி குளம் பகுதியில் நெல் நடவுக்கான முன்னேற்பாடு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தானிய பயிர்களும் விதைத்து உள்ளனர்.
இந்த பயிர்களுக்கு பல்வேறு வகையான உரங்கள் தேவைப்படுகிறது. இதையொட்டி ஒடிசா மாநிலம் பாரதீப் ரெயில் நிலையத்தில் இருந்து 21 ரெயில் பெட்டிகளில் உர மூட்டைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த சரக்கு ரெயில் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் 1,013 டன் டி.ஏ.பி. உரமும், 318 டன் காம்பிளக்ஸ் உரமும் வந்திருந்தது.
இந்த உர மூட்டைகள் ரெயில்களில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றப்பட்டது. அவை வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த பணியை வேளாண்மை துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.