13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு


13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
x

சாத்தூர் அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

சாத்தூா் அருகே கோல்வார்பட்டி அர்ஜுனா நதிக்கரையில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மூல வாசல் எதிரே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டு குறித்து சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய தொல்லியல் ஆய்வாளருமான ரவிச்சந்திரன் கூறியதாவது:-

கோல்வார்பட்டியில் உள்ள சிவன் கோவிலின் உள்ளே இருக்கும் கி.பி. 1612-ம் ஆண்டை சேர்ந்த நாயக்கர் கால கல்வெட்டு ஒன்றில் இருஞ்சோ நாட்டு கூடர்குடியான கோல்வார்பட்டி என குறிப்பிடப்பட்டுள்ளது.

13-ம் நூற்றாண்டு

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 13-ம் நூற்றாண்டை சேர்ந்த குலசேகர பாண்டியனின் 16-வது ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டிலும் இருஞ்சோநாட்டு கூடர்குடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

முற்கால பாண்டியர் காலத்திலும் கூடற்குடி என அழைக்கப்பட்டதை கழுகுமலை சமண் பள்ளியில் உள்ள முக்காலா பாண்டிய மன்னன் பராந்தக வீரநாராயணன் கால கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. கல்வெட்டு ஒன்றில் இருஞ்சோநாட்டு கூடற்குடி என்ற ஊரைச் சார்ந்த பெண் துறவியார் ஒருவர் தன் பெயராலும் வெம்பக்குடி நாட்டு இளவெண்பக்குடியைச் சேர்ந்த சேந்தன் பெயராலும் இரு தீர்த்தரங்கர் திருமேனியை சேவித்துள்ள செய்தியை அறிய முடிகிறது.

நீர் மேலாண்மை

13-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னன் குலசேகரனின் 16-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு நீர் மேலாண்மையை பற்றி கூறுகிறது. சிவபெருமானுக்கு சிறப்பு செய்யும் விதமாக அமைக்கப்பட்ட குளத்தின் தெற்கில் கருஞ்செய்யான கரிசல் நிலத்திற்கும், செவஞ்செய்யான செவல் நிலத்திற்கும் நீர் பாயும் விதமாக மடை ஒன்று அமைத்ததை கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை இதன் வாயிலாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story