பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 14-ந்தேதி பேச்சுப்போட்டி


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 14-ந்தேதி பேச்சுப்போட்டி
x

நேரு பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

கரூர்

பேச்சுப்போட்டி

கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 2022-ம் ஆண்டு ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி நவம்பர் மாதம் 14-ந்தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிட கூட்ட கலையரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மதியம் 1.30 மணி முதல் தொடங்கி நடத்தப்படும்.

ரூ.5 ஆயிரம் பரிசு

இந்த போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் பங்குபெறும் மாணவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளன.

இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளன.

தொலைபேசி எண்

கல்லூரி மாணவ-மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரி கல்வி இணை இயக்குனர் வழியாகவும், பள்ளி மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழியாகவும் பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04324- 255077-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story