நாய்கள் கடித்து 14 ஆடுகள் செத்தன
குடிமங்கலம் பகுதியில் நாய்கள் கடித்து 14 ஆடுகள் செத்தன
குடிமங்கலம்,
குடிமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் நாய்களால் 14 ஆடுகள் மற்றும் ஒரு கன்று கொடூரமாக கடித்து குதறி கொல்லப்பட்டுள்ளது.
போராட்டங்கள்
சிரமங்களே வாழ்க்கையாக கொண்டு சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை ஓட்டும் நிலையில் பல விவசாயிகள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு பெருமளவு கைகொடுப்பது கால்நடை வளர்ப்பாகவே உள்ளது. இந்தநிலையில் உடுமலை, மடத்துக்குளம் குடிமங்கலம் பகுதிகளில் ரத்த வெறி பிடித்து சுற்றித் திரியும் நாய்களால் கால்நடைகள் வேட்டையாடப்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்த நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி விட்டனர். ஆனாலும் இதுவரை தீர்வு காணப்படாத பிரச்சினையாகவே அது உள்ளது.
அந்தவகையில் நேற்று முன்தினம் இரவில் குடிமங்கலத்தையடுத்த கோட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி என்பவரது தோட்டத்து கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 14 ஆடுகள் மற்றும் ஒரு கன்று கடித்து குதறப்பட்டு உயிரிழந்துள்ளது.
கண்காணிப்புக் கேமரா
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.ஆரம்ப காலத்தில் ஏதோ ஒரு மர்ம விலங்கு கடித்து குதறுவதாக எண்ணி வந்த நிலையில் கண்காணிப்புக் கேமரா மற்றும் நேரில் பார்த்தவர்கள் மூலம் நாய்கள் தான் இந்த வெறிச்செயலில் ஈடுபடுகின்றன என்று உறுதிப்படுத்தினர்.இதனால் வனத்துறையினர் இந்த பிரச்சினையிலிருந்து விலகி விட்டனர். தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது யார் என்று தெரியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
சந்தேகங்கள்
இப்போதும் விவசாயிகளுக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது. வீட்டுக்கு அருகில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகள் கடித்து குதறப்படும்போது ஏன் சத்தம் கேட்பதில்லை. காட்டு விலங்குகள் போல நாய்களும் சத்தமெழும்பாத வகையில் மூச்சுக் குழாயை கடித்து வேட்டையாடுமா? அல்லது நுங்கை திருடித் தின்றவன் தப்பித்துக் கொள்ள கூந்தலை நக்கியவன் சிக்கிக் கொண்டது போல நாய்கள் சிக்கிக் கொள்கின்றனவா? கால்நடைகளை வேட்டையாடுவது நாய்கள்தானா? அல்லது ஏதேனும் வேட்டை விலங்குகளா என்பதை கண்டறியும் வகையில் முழுமையான ஆய்வுகள் செய்ய வேண்டும்.எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை பிடிக்கும் வகையில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.கால்நடைகளை வேட்டையாடும் விலங்குகளுக்கு குழந்தைகள் இலக்காகும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்'என்று விவசாயிகள் கூறினர்.