14 லட்சம் மின்இணைப்புகளை புவியியல் தகவல் அமைப்பில் பதிவு செய்து சாதனை


14 லட்சம் மின்இணைப்புகளை புவியியல் தகவல் அமைப்பில் பதிவு செய்து சாதனை
x

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 14 லட்சம் மின்இணைப்புகளை புவியியல் தகவல் அமைப்பில் பதிவு செய்து சாதனை படைத்து உள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லை:

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் இணைப்புகளின் எண்கள், அந்த இணைப்புகளுக்கான வீடு, கட்டிடங்களின் அமைவிடம் ஆகியவற்றை புவியியல் தகவல் அமைப்பில் (ஜி.ஐ.எஸ்) பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணிகள் மாவட்டம் தோறும் மும்முரமாக நடந்து வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மின்பகிர்மான வட்டத்தில் உதவி மின்பொறியாளர் (புவியியல் தகவல் அமைப்பு) அந்தோணி ராஜ் தலைமையில் ஊழியர்கள் இந்த பணியை செய்து வந்தனர். தமிழகத்தில் முதலாவதாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அனைத்து மின்இணைப்புகளையும் புவியியல் தகவல் அமைப்பில் பதிவு செய்து முடித்து சாதனை படைத்து உள்ளனர்.

இந்த இரு மாவட்டங்களில் மொத்தம் 14 லட்சத்து 17 ஆயிரத்து 174 மின்நுகர்வோர்கள் உள்ளனர். 103 பிரிவு அலுவலகங்களின் கீழ் மொத்தம் 13 ஆயிரத்து 321 மின்மாற்றிகள் உள்ளன. 8,436 கிலோ மீட்டருக்கு உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதை உள்ளது. இதில் மின்நுகர்வோர் தகவல்கள் மின்நுகர்வோர் இணைப்பு பெற்றிருக்கும் மின்கம்பம், அந்த மின்கம்பம் வழியாக செல்லும் மின்பாதை, அந்த மின்பாதை எந்த மின்மாற்றியில் இருந்து வருகிறது, மின்மாற்றிகளுக்கு வரக்கூடிய உயர் அழுத்த மின்பாதை எந்த உப மின்நிலையத்தில் இருந்து வருகிறது? என்கிற முழு விவரமும் புவியியல் தகவல் அமைப்பு மூலமாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில் தமிழக மின்சார வாரியத்தில் தகவல் தொழில்நுட்ப புரட்சியில் மேலும் ஒரு மைல்கல்லாக இது அமைய உள்ளது.

ஏனென்றால் மின்நுகர்வோர் தங்கள் மின் இணைப்பை புவியியல் தகவல் அமைப்பு (கூகுள் மேப்) மூலமாக அறிந்துகொள்ள இது உதவியாக இருக்கும். தமிழகத்திலேயே நெல்லை மின்பகிர்மான வட்டம் அனைத்து தகவல்களையும் முதலில் பதிவேற்றம் செய்தமைக்காக நெல்லை மேற்பார்வை பொறியாளர் ராஜன்ராஜ் நேற்று உதவி மின் பொறியாளர் அந்தோணி ராஜ் பணியை பாராட்டி, சான்றிதழும், பரிசும் வழங்கினார்.


Next Story