ரூ.14 லட்சத்தில் 44 இடங்களில் கண்காணிப்பு கேமரா


திருத்துறைப்பூண்டியில் ரூ.14 லட்சத்தில் 44 இடங்களில் கண்காணிப்பு கேமராவை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி
:

திருத்துறைப்பூண்டியில் ரூ.14 லட்சத்தில் 44 இடங்களில் கண்காணிப்பு கேமராவை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி பகுதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், நியமனக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன், திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் பிரதன்பாபு, துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்து தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத்துடன் இணைந்து ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நகரம் முழுவதும் 44 இடங்களில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

44 இடங்களில் கண்காணிப்பு கேமரா

இந்த கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார். முன்னதாக திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாரிமுத்து எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், வர்த்தக சங்க செயலாளர் நாராயணமூர்த்தி, பொருளாளர் ராமசாமி, துணைத்தலைவர் ஜபருல்லா, துணைச் செயலாளர் லட்சுமணன், திருத்துறைப்பூண்டி பகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் வீரசேகரன் நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நகர, தாலுகா போலீஸ் நிலையங்கள்

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கூறியதாவது:- திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு கூடுதலான போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 8 போலீசார் மட்டுமே பற்றாக்குறை உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் நியமிக்கப்படுவார்கள். பள்ளி, கல்லூரிகள் போன்ற இடங்களில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுவார்கள்.

விரைவில் திருத்துறைப்பூண்டியில் நகர போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா போலீஸ் நிலையம் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குற்றச்செயல்கள் முற்றிலுமாக தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் நன்றி கூறினார்.


Next Story