ஆசிரியர் தகுதி தேர்வில் 1.53 லட்சம் பேர் எழுதியதில் 14 சதவீதம் 'தேர்ச்சி'...!


ஆசிரியர் தகுதி தேர்வில் 1.53 லட்சம் பேர் எழுதியதில் 14 சதவீதம் தேர்ச்சி...!
x

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களில் 21 ஆயிரத்து 543 பேர் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் நபர்களே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த அக்டோபர் 14-ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. அந்த தேர்வில் தாள் ஒன்றில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் டிசம்பர் 7-ம் தேதி தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியானது.

அதில் தாள் ஒன்றில் 21 ஆயிரத்து 543 பேர் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். இது 14 சதவீதம் ஆகும். தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழை, டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில், மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டது. எனவே, தற்போது திருத்தம் செய்வதற்கான கோரிக்கையின் மீது, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story