உரிய ஆவணமில்லாத 14 வாகனங்கள் பறிமுதல்
திருப்பத்தூரில் உரிய ஆவணமில்லாத 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூரில் பெரும்பாலான வாகனங்கள் முறையான ஆவணங்கள் இன்றியும், ஓட்டுனர் உரிமம் பெறாமல் வாகனங்களை ஓட்டுவதாக கலெக்டர் அமர் குஷ்வாஹாவுக்கு புகார்கள் சென்றது. அவரது உத்தரவின்பேரில், திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை நிறுத்தி எச்சரித்து அனுப்பினர். ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிச் சென்றவர்களிடம் அபராதம் வசூலித்தனர். அதிகமான பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற 2 ஆட்டோக்கள், முறையான ஆவணங்கள் இல்லாத, தகுதி சான்று புதுப்பிக்காத 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், வரி செலுத்தாத இரு பொக்லைன் எந்திரத்திற்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் உள்பட ரூ.4 லட்சத்து 15 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.