143 மரங்கள் வெட்டி அகற்றம்
மேற்கு புறவழிச்சாலை பணிக்காக 143 மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
மேற்கு புறவழிச்சாலை பணிக்காக 143 மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு புறவழிச்சாலை
பொள்ளாச்சி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்திமில் அருகில் தொடங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன்முத்தூர், நல்லூர் வழியாக ஜமீன்ஊத்துக்குளி கைகாட்டி வரை 8.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.
தற்போது 3½ மீட்டர் நீளமுள்ள சாலையை 10 மீட்டருக்கு அகலப்படுத்தப்படுகிறது. மேலும் சிறு பாலங்களும் கட்டப்படுகின்றன. இந்த நிலையில் நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் தாமதமானது. இதற்கிடையில் மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் ஜமீன்ஊத்துக்குளியில் மரங்கள் வெட்டி அகற்றும் பணியும் நடைபெறுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் (திட்டங்கள்) கூறியதாவது:-
ரூ.5 கோடி ஒதுக்கீடு
பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை 8.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இதற்காக முதலில் ரூ.50 கோடியே 35 லட்சத்து 30 ஆயிரத்துக்கு தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டது. அதன்பிறகு நிலம் கையகப்படுத்த, சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய திருத்தி அனுப்பப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஆனதால் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஆனது. தற்போது ரூ.73 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் மேற்கு புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்படும் ஜமீன்ஊத்துக்குளியில் இருந்து கோவை ரோடு ஆ.சங்கம்பாளையம் வரை 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.5 கோடியில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜமீன்ஊத்துக்குளி கைகாட்டியில் இருந்து நல்லூர் கைகாட்டி வரை மேற்கு புறவழிச்சாலை பணிக்கு இடையூறாக உள்ள 143 மரங்கள் வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. இதில் 3 மஞ்ச நந்தி, ஒரு வேப்பமரம் ஆகிய 4 மரங்களை வேரோடு புடுங்கி மறுநடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மரங்கள் வெட்டும் பணி, குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி முடிந்ததும், சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.