கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவு கலெக்டர் அறிவிப்பு


கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவு கலெக்டர் அறிவிப்பு
x

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

பிளஸ்-2 மாணவி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி(17), பள்ளி வளாகத்தில் இறந்தது தொடர்பாக பல்வேறு அமைப்பினர் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பலகட்ட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாணவியின் சாவு தொடர்பாக கடந்த 3 நாட்களாக முறையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும், ரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

பிரேத பரிசோதனை அறிக்கை

இந்த விசாரணையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவு உள்ளிட்டவை தாக்கல் செய்யப்படும். மேலும் இன்று நடந்த வன்முறை சம்பவம் தொடர்பான அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். இவ்வழக்கு தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு, விசாரணைக்கு ஆஜராக மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அப்போது அவர்கள் விசாரணையை முறையாக நடத்த வேண்டும். பள்ளி நிர்வாகம் தரப்பில் தவறு இருந்தால் பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

போலீஸ் குவிப்பு

இதற்கிடையே இன்று மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை கலைத்து உள்ளோம். தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டதாலும், போலீசார் பலர் தாக்கப்பட்டதாலும் போராட்டத்தை கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

144 தடை உத்தரவு

அதாவது கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்கள் மற்றும் சின்னசேலம் குறுவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும், நயினார்பாளையம் குறுவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இன்று மதியம் முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

இந்த தடை உத்தரவு வருகிற 31-ந் தேதி பிற்பகல் வரை நடைமுறையில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story