விழுப்புரம் மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 145 பேர் கைது


விழுப்புரம் மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 145 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளியன்று நேர கட்டுப்பாட்டு விதியை கண்டுகொள்ளாமல் தடையை மீறி பட்டாசு வெடித்த 145 பேர் கைது செய்யப்பட்டனர்

விழுப்புரம்

விழுப்புரம்

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகையன்று அதிகளவில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிப்பதற்கு நேரக்கட்டுப்பாட்டை விதித்து சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக்கூடாது எனவும், அதனை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

தடையை மீறி

இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடினர். சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புதுப்புது துணிமணிகளை அணிந்துகொண்டு தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

குறிப்பாக கோர்ட்டு விதித்திருந்த தடையை மீறியும், நேரக்கட்டுப்பாட்டை தாண்டியும் ஆரவாரத்துடன் பட்டாசுகளை வெடித்தனர். சிலர், தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்து கொண்டாடினர்.

145 பேர் கைது

இதுதொடர்பாக நேர கட்டுப்பாட்டை கண்டுகொள்ளாமல் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதில் விழுப்புரம் உட்கோட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய நாளில் 26 பேர் மீதும், தீபாவளியன்று 52 பேர் மீதும் என மொத்தம் 78 பேர் மீதும், திண்டிவனம் உட்கோட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய நாளில் 3 பேர் மீதும், தீபாவளியன்று 23 பேர் மீதும் என மொத்தம் 26 பேர் மீதும், செஞ்சி உட்கோட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய நாளில் 2 பேர் மீதும், தீபாவளியன்று 13 பேர் மீதும் என மொத்தம் 15 பேர் மீதும், கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய நாளில் 5 பேர் மீதும், தீபாவளியன்று 21 பேர் மீதும் என மொத்தம் 26 பேர் என மாவட்டம் முழுவதும் 145 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story