பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் கடந்த ஆண்டு விபத்தில் 145 பேர் உயிரிழப்பு-120 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் கடந்த ஆண்டில் நடந்த 446 விபத்தில் 145 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் காரணமாக 120 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. மேலும் அதிக குதிரை திறன் கொண்ட வாகனங்களை கவனக்குறைவாக ஓட்டுவதாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதற்கிடையில் மோசமான சாலைகள், ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாத வளைவுகள், பாலங்களிலும் விபத்துக்கள் நடக்கிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கி பேசினார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது:-
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து வேகத்தடை, தடுப்புகள் அமைப்பது, ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஆண்டில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உயிரிழப்பு இல்லாத விபத்துக்களில் 312 பேர் லேசான காயமும், 548 பேர் பலத்த காயமும் அடைந்து உள்ளனர்.
ஓட்டுனர் உரிமம் ரத்து
உயிரிழப்பு ஏற்படும் வகையில் 134 விபத்துக்கள் நடந்து உள்ளது. மொத்தம் 446 விபத்துக்களில் 145 பேர் இறந்து உள்ளனர்.
மேலும் விபத்துக்களில் 60 சதவீதம் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.18 வயது பூர்த்தி அடையாத நபர்கள் வாகனங்களை ஓட்ட கூடாது. விபத்துக்கள் ஏற்படுத்தும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 120 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பை ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை குறைந்தது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ரத்து செய்யலாம்.
மேலும் 3 மாதத்திற்குள் தொடர்ந்து விபத்தை ஏற்படும் வாகனங்களில் உரிமமும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் நிரந்தரமாக ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விபத்துக்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.