நெல்லை மாவட்டத்தில்1,485 வாக்குச்சாவடிகள் அமைப்பு; பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
நெல்லை மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக 5 சட்டமன்ற தொகுதிகளில் 1,485 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான பட்டியலை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டார்.
நெல்லை மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக 5 சட்டமன்ற தொகுதிகளில் 1,485 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான பட்டியலை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டார்.
கலெக்டர் வெளியிட்டார்
வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்குச்சாவடி பட்டியலின் அடிப்படையில் வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்துக்கான வாக்குச்சாவடி பட்டியலை நெல்லை கலெக்டர் அலுவலக சிறு கூட்ட அரங்கில் நேற்று கலெக்டர் கார்த்திகேயன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
1,485 வாக்குச்சாவடிகள்
நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே 1,484 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைவிட மாற்றம் மற்றும் பெயர் திருத்தம் ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமைவிட மாற்றம்
அதன்படி நெல்லை சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளில் 6 வாக்குச்சாவடிகள் அமைவிடம் மாற்றமும், 2 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அம்பை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளில் 15 இடமாற்றம், 1 பெயர் மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது.
பாளையங்கோட்டை தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளில், ஒரு வாக்குச்சாவடி கூடுதலாக சேர்க்கப்பட்டு 270 வாக்குச்சாவடியாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் 8 வாக்குச்சாவடிகள் கட்டிடம் மாற்றப்பட்டுள்ளது.
நாங்குநேரி தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளில் 3 அமைவிட மாற்றம், 4 பெயர் மாற்றம், ராதாபுரம் தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளில் 1 கட்டிட மாற்றமும், 2 பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1,484 வாக்குச்சாவடிகளில், 33 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றமும், 9 பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. ஒரு புதிய வாக்குச்சாவடியுடன் சேர்த்து மொத்தம் 1,485 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஆட்சேபனை மற்றும் திருத்தங்கள் இருந்தால் வாக்காளர் பதிவு அலுவலர்கள் அல்லது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டரிடம் 7 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.