1,488 பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு விரைவில் மறுகட்டுமானம்
உப்பிலிபாளையம், சவுரிபாளையத்தில் பழுதடைந்த 1,488 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்யப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
உப்பிலிபாளையம், சவுரிபாளையத்தில் பழுதடைந்த 1,488 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்யப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
கோவை உப்பிலிபாளையம் மற்றும் சவுரிபாளையத்தில் தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் பழுதடைந்த நிலையில் உள்ள 1,488 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்கி கூறியதாவது:-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த வீடுக ளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வந்தது.
அதன்பேரில் சிங்காநல்லூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 960 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மறுகட்டுமானம்
இதேபோல் உப்பிலிபாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 960 வீடுகள் மற்றும் சவுரிபாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 528 வீடுகள் என 1,488 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பாக குடியிருப் போர் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கங்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.
மறுகட்டுமானம் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் சார்பில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த குடியிருப்பு சங்கங்கள் தங்கள் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை அரசிடம் தெரிவிக்கலாம்.
குடியிருப்புவாசிகள், குடியிருப்பு சங்கத்தினர் இதற்கு சம்மதம் தெரிவித்ததும் மறுகட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியா ளர் ரவிச்சந்திரன், உப்பிலிபாளையம் திட்ட ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழு மற்றும் சவுரிபாளையம் குடியிருப்போர் நலச் சங்கம் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.