சென்னை மாநகராட்சியில் 'தொடர்ந்து 15 செ.மீ. மழைபெய்தும் மழைநீர் தேங்கவில்லை' அமைச்சர் பேட்டி


சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து 15 செ.மீ. மழைபெய்தும் மழைநீர் தேங்கவில்லை அமைச்சர் பேட்டி
x

நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து 15 செ.மீ. மழைபெய்தும் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மழைநீர் வடிகால்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது பல்வேறு இடங்களில் மழைநீர் தேக்கம் என்பது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திட வேண்டும் என்கிற வகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருபுகழ் தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று, கள ஆய்வுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட அந்த பரிந்துரைகள் இன்றைக்கு சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டது.

மழைநீர் வடிகால் பணிகள்

அதன்படி சென்னையின் பிரதான பகுதிகளில் 220 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.710 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் இதுவரை 157 கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் தற்போது முடிக்கப்பட்டு இருக்கின்றன.

இதனால் சென்னையில் எப்போது வழக்கம்போல் மழைநீர் தேங்கி நிற்கின்ற பகுதிகளான சீத்தம்மாள் காலனி, ஜி.என்.செட்டி சாலை, கலைஞர் நகரில் உள்ள ராஜமன்னார் சாலை, வடசென்னையில் கொளத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கவில்லை.

மழைநீர் தேக்கம் இல்லை

ஆனால் நேற்று தொடங்கி இதுவரை 10 முதல் 15 செ.மீட்டர் வரை எல்லா இடங்களிலும் இந்த வடகிழக்கு பருவமழை பதிவாகி உள்ளது. இவ்வாறு மழை பெய்தும் கூட, மேற்கூறிய பகுதிகளில் மழைநீர் தேக்கம் என்பது இல்லாத நிலை உருவாகியுள்ளது.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்ப்பேட்டை, அம்பத்தூர், கொளத்தூர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்குவது என்பது பெருமளவு தவிர்க்கப்பட்டிருக்கிறது.

தூர்வாரப்பட்ட கால்வாய்கள்

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 2 ஆயிரத்து 100 மழைநீர் வடிகால்வாய்களில் 1,305 கி.மீட்டர் நீளத்துக்கு, கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருக்கிறது. இதனால் கடந்த ஆண்டு சென்னையில் 700 இடங்களில் மழைநீர் தேக்கம் என்பது இருந்தது. அது தற்போது 40 இடங்கள் என சுருங்கியிருக்கிறது.

இது அடுத்தடுத்த நாட்களில் 100 சதவீதமும் மழைநீர் தேக்கமில்லாத சென்னை, வடகிழக்கு பருவமழை பாதிப்பு இல்லாத சென்னை என்கிற வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story