சிறுமலை மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்


சிறுமலை மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்
x

திண்டுக்கல் அருகே சிறுமலை மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

'குட்டி கொடைக்கானல்'

திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுமலை உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த சிறுமலை சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இது, 'குட்டி கொடைக்கானல்' என்றும் அழைக்கப்படுகிறது. சிறுமலையில் பழையூர், புதூர், அண்ணாநகர், தாழக்கடை, அகஸ்தியர்புரம், தென்மலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு மா, பலா, வாழை, எலுமிச்சை, அவரை, மிளகு, சவ்சவ் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

அரசு பஸ்

சிறுமலைக்கு சென்று வர அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5.15 மணி அளவில், அரசு பஸ் ஒன்று சிறுமலையை அடுத்த தென்மலை நோக்கி புறப்பட்டது.

இந்த பஸ்சை, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த டிரைவர் விஜயகுமார் (வயது 40) ஓட்டினார். திண்டுக்கல்லை சேர்ந்த சேகர் (50) கண்டக்டராக பணிபுரிந்தார். 13 பேர் பஸ்சில் பயணம் செய்தனர்.

குறுக்கே வந்த காட்டெருமை

வளைந்து நெளிந்து நெஞ்சை நிலை குலைய செய்யும் அபாயகரமான 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது சிறுமலை மலைப்பாதை ஆகும். இதில் 18-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் குட்டக்காடு என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது காட்டெருமை ஒன்று மலைப்பாதையின் குறுக்கே வந்தது. அடர்ந்த பனிமூட்டம், சாரல் மழை காரணமாக மலைப்பாதையின் குறுக்கே வந்த காட்டெருமை சரிவர தெரியவில்லை.

இதனால் காட்டெருமை மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து மரங்களில் மோதி நின்றது.

15 பேர் படுகாயம்

இந்த விபத்தில் டிரைவர் விஜயகுமார், கண்டக்டர் சேகர் (50), சிறுமலையை சேர்ந்த ரமணி (58), பிச்சையம்மாள் (50) குப்புசாமி (40), கணேசன் (65), பாஸ்கர் (62), வில்லியம் (50) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கிய இவர்கள் அபயகுரல் எழுப்பினர். அவர்களது சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

உயிர் தப்பிய பயணிகள்

விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அபாயகரமான பள்ளத்தாக்கு உள்ளது. அந்த பகுதியில் பஸ் கவிழவில்லை. அப்படி பஸ் கவிழ்ந்து இருந்தால் உயிர் பலி ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணம் செய்த அனைவரும் உயிர் தப்பினர். இதற்கிடையே விபத்தில் காயம் அடைந்து, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை எம்.எல்.ஏ.க்கள் இ.பெ. செந்தில்குமார், காந்திராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் தி.மு.க. சார்பில் நிதி உதவி அளித்தனர்.

அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜா, திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கீதா வெள்ளிமலை (சிறுமலை), சித்ரா ராதாகிருஷ்ணன் (தோட்டனூத்து) ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story