ரெயிலில் பனியன் வியாபாரியிடம் 15 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயிலில் பனியன் வியாபாரியிடம் 15 கிலோ கஞ்சா பறிமுதல்
திருப்பூர்
கோவை ரெயில்வே போலீஸ் ஏட்டு ராஜலிங்கம், திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலைய காவலர்கள் கேபால், சையது முகமது ஆகியோர் நேற்று விசாகப்பட்டினத்தில் இருந்து கேரளா சென்ற ரெயிலில் கஞ்சா சோதனை மேற்கொண்டனர். ரெயில் ஈரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கி வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது.
அப்போது எஸ்.8 பெட்டியில் 15 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களுடன் பை இருந்தது. அதை கைப்பற்றி விசாரித்தபோது அந்த ரெயிலில் வந்த கேரள மாநிலம் காசர்கோடு காளியங்காடு பகுதி சேர்ந்த ரபீக் (வயது 35) என்பவர் கொண்டு வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், இவர் திருப்பூரில் பனியன் வியாபாரம் செய்து வந்துள்ளார். ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரபீக்கை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.






