முதியவருக்கு ரூ.15½ லட்சம் இழப்பீடு


முதியவருக்கு ரூ.15½ லட்சம் இழப்பீடு
x

முதியவருக்கு ரூ.15½ லட்சம் இழப்பீடு

கோயம்புத்தூர்

கோவை

விபத்தில் பார்வை பாதிக்கப்பட்ட முதியவருக்கு ரூ.15½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

விபத்தில் பார்வை பாதிப்பு

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் வேலுமணி (வயது 62). இவர் அந்தப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கோவை-சத்தி சாலையில் மைல்கல் பஸ்நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட வேலுமணிக்கு கால்கள், தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன் கண்பார்வையும் பாதிக்கப்பட்டது. எனவே தனக்கு உரிய இழப்பீடு கேட்டு கோவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து முடிந்ததால் தீர்ப்பு கூறப்பட்டது.

ரூ.15½ லட்சம் இழப்பீடு

அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், விபத்தில் காயம் அடைந்த வேலுமணிக்கு 51 சதவீதம் நிரந்தர ஊனம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவத்துறை சான்று அளித்து உள்ளது. எனவே அவருக்கு இழப்பீடாக ரூ.15 லட்சத்து 48 ஆயிரத்தை 7.50 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். மேலும் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மது என்பவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை.

இது காப்பீடு விதிமுறையை மீறிய செயல் ஆகும். எனவே விபத்துக்கான இழப்பீட்டு தொகையை காப்பீடு நிறுவனம் முதலில் செலுத்திவிட்டு, அந்த தொகையை இருசக்கர வாகனத்தின் உரிமையாளரிடம் இருந்து வசூலித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.


Next Story