வீடுகளில் இருந்து 15 மூட்டை வெடிபொருட்கள் பறிமுதல்


வீடுகளில் இருந்து 15 மூட்டை வெடிபொருட்கள் பறிமுதல்
x

பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தை தொடர்ந்து விரகாலூரில் போலீசார் நடத்திய சோதனையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் குடிசை தொழில்போல் செயல்பட்டு வைக்கப்பட்டு இருந்த 15 மூட்டை வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.

அரியலூர்

15 மூட்டை வெடிபொருட்கள்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூரில் செயல்பட்ட யாழ் அன்ட் கோ என்ற நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தையே உளுக்கியுள்ளது. இந்த நிலையில் வெடி விபத்து நடந்த ஆலையை சுற்றி வசிக்கும் பொதுமக்கள், ஆலையில் இருந்து ஊசி வெடிகள் என சொல்லக்கூடிய சிறியரக பட்டாசுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்து குடிசை தொழில் போல் பட்டாசு தயார் செய்து வந்துள்ளனர். பின்னர் பொதுமக்கள் தயார் செய்து கொடுக்கும் பட்டாசுகள் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டு வந்துள்ளது. இதனை அறிந்த அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அந்தோணி ஆரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் 4 பேரின் வீடுகளில் இருந்த சுமார் 15 மூட்டை பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

குடிசை தொழில்

தொடர்ந்து நடத்திய விசாரணையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரம் என்பதால் கூடுதலாக வருமானம் ஈட்டும் நோக்கில் பட்டாசு ஆலைக்கு சென்று வந்த நேரம் போக மாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டில் இருந்தே இந்த சிறிய ரக ஊசி பட்டாசுகளை தயார் செய்து ஆலை உரிமையாளரிடம் கொடுத்து வந்ததாக அப்பகுதியினர் கூறுகின்றனர். பின்னர் இது குறித்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விபத்து ஏற்பட்ட ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்களின் வீட்டில் வெடி பொருட்கள் வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சோதனையில் ஈடுபட்டு சுமார் 15 மூட்டை வெடி பொருட்கள் பாதுகாப்பு நோக்கத்திற்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை முற்றிலும் அழிக்க உள்ளோம். மேலும் இந்த வெடி பொருட்களை எதற்காக அவர்கள் வீட்டில் வைத்திருந்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பட்டாசுகளை வீடுகளில் வைத்திருந்த 4 பேரையும் அழைத்து இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இது சட்டத்திற்கு புறம்பான செயல் எனக்கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story