ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பயணிகள் காயம்
உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பயணிகள் காயம்
உளுந்தூர்பேட்டை
திருச்சியில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மதியம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பஸ் நிறுத்த பகுதியில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவரின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை வலது பக்கமாக திருப்ப முயன்றார். அப்போது எதிர்பாரத விதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 15 பயணிகளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டா்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த எடைக்கல் போலீசார் விபத்துக்குள்ளான பஸ்சை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் விபத்துக்குள்ளான ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்தது, இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் வாகனத்தை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது இந்த காட்சி வைரலாகி வருகிறது.