அரசு பஸ் கவிழ்ந்து விபத்து டிரைவர் உள்பட 15 பேர் காயம்
விழுப்புரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட 15 பேர் காயமடைந்தனர்
விழுப்புரம்
அரசு பஸ் கவிழ்ந்தது
திருவாரூரில் இருந்து காஞ்சீபுரத்திற்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை நாகப்பட்டினம் வடகூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜசேகர்(வயது 50) என்பவர் ஓட்டிச்சென்றார். பஸ்சில் 30 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த பஸ் நேற்று அதிகாலை 3 மணியளவில் விழுப்புரம் அருகே சாலைஅகரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிகெட்டு ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
15 பேர் காயம்
இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட பயணிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள். என கூச்சல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிச்சென்று விபத்தில் காயமடைந்த பஸ் டிரைவர் ராஜசேகர் மற்றும் பயணிகள் திருத்தணி அருகே நீர்மலை பகுதி ஆனந்த் (42), கடலூர் மாவட்டம் வடலூர் செல்லியம்மன் கோவில் தெரு தயாநிதி மனைவி சுமதி(52), சீர்காழி தாலுகா கீழவரகுடி பகுதி வெள்ளைச்சாமி (65) உள்பட 15 பேரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அதில் பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்து கிடந்த பஸ் அப்புறப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.