கலை விருதுகளுக்கு 15 பேர் தேர்வு


கலை விருதுகளுக்கு 15 பேர் தேர்வு
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கலை விருதுகளுக்கு பதினைந்து பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 15 பேர் கலை விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விருது

தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக 2021-2022-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த 15 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கிட அரசு ஆணையிடப்பட்டு உள்ளது.

2021-2022-ம் ஆண்டுக்கு விருதுகள் வழங்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் 7-10-2022 அன்று நடைபெற்ற தேர்வுக் குழுக் கூட்டத்தில் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கலை இளமணி

அதன்படி கலை இளமணி விருதுக்கு குரலிசை கலைஞர் சு.பாலஅய்யணேஷ்வேணி, பரதநாட்டிய கலைஞர் ச.பவதாரினி, குரலிசை கலைஞர் சா.ஜோஷினி, கலை வளர்மணி விருதுக்கு கழுகுமலை தவில் கலைஞர் மு.சொக்கலிங்கம், ஓட்டப்பிடாரம் கரகாட்ட கலைஞர் ரா.அருண்குமார், வல்லநாடு நாதசுரம் கலைஞர் எஸ்.கணேசன், கலைச்சுடர்மணி விருதுக்கு சிலம்பம் கலைஞர் ஆழ்வார்திருநகரி அ.மணிகண்டன், ஓவிய கலைஞர் கோவில்பட்டி எஸ்.கார்த்திகை செல்வம், தப்பாட்ட கலைஞர் தூத்துக்குடி சே.செல்வம், கலைநன்மணி விருதுக்கு விளாத்திகுளம் வில்லிசை கலைஞர் எஸ்.கே.கலைச்செல்வி, தூத்துக்குடி தவில் கலைஞர் ரா.அப்ராணந்தம், நாடக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி எஸ்.காமராசு, கலைமுதுமணி விருதுக்கு ஓட்டப்பிடாரம் நாடக கலைஞர் எஸ்.தனசேகரன், விளாத்திகுளம் வில்லிசை கலைஞர் எம்.நகுலன், கோவில்பட்டி ஓவிய கலைஞர் கே.ஜி.ஞானகுரு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெறவுள்ள தமிழிசை விழாவில் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story