கூரை வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 15 பேர் தீக்காயம்


கூரை வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 15 பேர் தீக்காயம்
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அருகே கூரை வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்க முயன்ற 15 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர் அருகே கூரை வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்க முயன்ற 15 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கூரை வீடு தீப்பிடித்தது

மயிலாடுதுறை மாவட்டம் மடப்புரம் ஊராட்சிக்குட்பட்ட பெரியசாவடி குளம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 40). கூலி தொழிலாளி. இவர் தனது குடும்பத்தினருடன் அந்த பகுதியில் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு திடீரென இவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முற்பட்டனர்.

சிலிண்டர் வெடித்தது

அப்போது கலைவாணன் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் தீ மேலும் கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

15 பேருக்கு தீக்காயம்

ஆனால் இந்த விபத்தில் தீயை அணைக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதாப்(40), ஜெயக்குமார்(45), மணிமாறன்(48), ஜெகதீஸ்(27), வினோத்ராஜ்(34), ராஜேஷ்(36), இளையபெருமாள்(43), மதன்(19), பிரேமா(28), கருணாநிதி(48), சுரேஷ்(40), சரவணன்(43), கலியபெருமாள்(68), சுரேஷ்குமார்(19), நடராஜன்(23) உள்ளிட்ட 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

உடனே அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் பலத்த தீக்காயமடைந்த கருணாநிதி, சுரேஷ், சரவணன் ஆகிய 3 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கலெக்டர் ஆறுதல்

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, டி.வி., வாஷிங் மெஷின், பத்திரங்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பாத்திரங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகின.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அங்கு உள்ள டாக்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். சம்பவ இடத்திற்கு தரங்கம்பாடி தாசில்தார் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்்தி வருகின்றனர்.


Next Story