பொள்ளாச்சியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை, ரூ.5½ லட்சம் கேமரா திருட்டு-மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பொள்ளாச்சியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை, ரூ.5½ லட்சம் கேமராவை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை, ரூ.5½ லட்சம் கேமராவை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
15 பவுன் நகை திருட்டு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் உள்ள சேரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). புகைப்பட கலைஞர். இவருக்கு திலகராணி (47) என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளார்கள். சிவகுமார் நேற்று முன்தினம் கோவையில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்று விட்டதால் திலகராணி, தனது மகனுடன் அம்மா வீடு அமைந்துள்ள பழனியப்பா நகருக்கு சென்று விட்டார். நேற்று காலை திலகராணி தனது மகனுடன் சேரன் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திலகராணி வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தார். பீரோ திறந்த நிலையில் தங்க நகைகள் வைத்திருந்த பேக் படுக்கையில் சிதறிக்கிடந்தன. அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள வீடியோ கேமராவையும் மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மகாலிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமலைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தங்க நகை வைத்திருந்த பீரோவின் சாவி பீரோ அருகே வைத்திருந்ததால் வீட்டுக்குள் புகுந்த திருடன் பீரோ அருகில் இருந்த சாவியை எடுத்து எளிதில் தாக பீரோவை திறந்து பீரோவில் இருந்த நகைகளை திருடி, அருகில் இருந்த வீடியோ கேமராவையும் திருடி சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் பதிவுசெய்யப்பட்டன. திருட்டு சம்பவம் நடைபெற்ற வீடு அருகே கண்காணிப்பு கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. மேலும் போலீசார் திருட்டு சம்பவம் நடைபெற்ற வீடு அருகே வேறு யாராவது வீட்டில் கண்காணிப்பு கேமரா எதுவும் உள்ளதா என்பதையும், மற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வீட்டில் நகையை திருடிச் சென்ற மர்மநபர்ளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.








