ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு
பொள்ளாச்சி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி விட்டு, மிளகாய் பொடியை தூவி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி விட்டு, மிளகாய் பொடியை தூவி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஓய்வு பெற்ற ஆசிரியர்
பொள்ளாச்சி அருகே உள்ள நா.மூ.சுங்கத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி அம்ரித் கவுரி (வயது 75). இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களுக்கு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கோவையில் வசித்து வருகின்றனர். தோட்டத்தில் உள்ள வீட்டில் காளியப்பனும், அம்ரித் கவுரியும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி கணவன், மனைவி இருவரும் கோவையில் தனது மகள் புதிதாக கட்டி உள்ள வீடு கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சென்றனர். இதற்கிடையில் சம்பவத்தன்று தோட்டத்தில் வேலை பார்க்கும் வீரன் என்பவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கோவையில் இருந்த அம்ரித் கவுரிக்கு தகவல் தெரிவித்தார்.
15 பவுன் நகை திருட்டு
பின்னர் அவர்கள் கோவையில் இருந்து நா.மூ.சுங்கத்தில் உள்ள வீட்டிற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து ஆழியாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வைர கம்மல் மற்றும் 15 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது.
மர்ம ஆசாமிகள் போலீசில் சிக்காமல் இருக்க வீட்டிற்குள் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.