திருச்சி கோட்டத்தில் ரூ.120 கோடியில் 15 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்-ரெயில்வே அதிகாரி அன்பழகன் பேட்டி
திருச்சி கோட்டத்தில் ரூ.120 கோடியில் 15 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது என்று ரெயில்வே அதிகாரி அன்பழகன் தெரிவித்தார்.
திருச்சி கோட்டத்தில் ரூ.120 கோடியில் 15 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது என்று ரெயில்வே அதிகாரி அன்பழகன் தெரிவித்தார்.
நவீன வசதிகள்
திருச்சி ரெயில்வே கோட்ட பொதுமேலாளர் அன்பழகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தில் மத்திய அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே 3 ரெயில் நிலையங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் உள்ள ராணி கமலாபதி ரெயில் நிலையம், பெங்களூருவில் விஸ்வேஸ்வரய்யா ரெயில் நிலையம், குஜராத்தில் காந்திநகர் ரெயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சி கோட்டம்
இதன் தொடர்ச்சியாக அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள ஆயிரத்து 309 ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படுகின்றன. அந்த வகையில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், காரைக்கால், மன்னார்குடி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், அரியலூர், திருவண்ணாமலை, விருதாசலம், வேலூர் கண்டோன்மெண்ட், போளூர், லால்குடி, புதுச்சேரி ஆகிய 15 ரெயில் நிலையங்கள் சுமார் ரூ.120 கோடியில் நவீனமயமாக்கப்படுகிறது.
பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டும் இந்த பெருந்திட்டம் தயாரிக்கப்படுகிறது. அதன்அடிப்படையில் வெளிநாடுகளில் இருப்பதுபோல் ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. தகவல் பலகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக திருச்சி கோட்டத்தில் ரூ.20 கோடியில் மயிலாடுதுறை ரெயில் நிலையமும், ரூ.23 கோடியில் தஞ்சை ரெயில் நிலையமும், ரூ.24 கோடியில் விழுப்புரம் ரெயில் நிலையமும் ஆகிய ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி ரெயில் நிலையத்துக்கு மட்டும் தனியாக ரூ.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக நாடு முழுவதும் 500 ரெயில் நிலையங்கள் இந்த திட்டத்தில் நவீனமயமாக்கப்படுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இந்த திட்டத்தை 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். அப்போது ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ராமலிங்கம், முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.