15 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை


தினத்தந்தி 12 July 2023 1:41 AM IST (Updated: 12 July 2023 5:06 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை, குடந்தை மாநகராட்சி மக்களுக்கு இனிப்பான செய்தியாக 15 ரேஷன் கடைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. குறைந்த அளவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால் ஒரு நபருக்கு அரை கிலோ மட்டும் வினியோகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சை, குடந்தை மாநகராட்சி மக்களுக்கு இனிப்பான செய்தியாக 15 ரேஷன் கடைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. குறைந்த அளவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால் ஒரு நபருக்கு அரை கிலோ மட்டும் வினியோகம் செய்யப்பட்டது.

தக்காளி விலை கடும் உயர்வு

தமிழகத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தக்காளி விளைச்சல் இல்லாததால் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வந்தது. அங்கும் விளைச்சல் குறைந்த நிலையில் பருவமழை பெய்ததால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து தமிழகத்திற்கு வரத்து குறைந்தது. இதனால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது.

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு தக்காளி வழங்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்து சென்னையில் விற்பனை செய்து வருகிறது.

ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு விற்பனை

தஞ்சையில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் செயல்படும் பசுமை பண்ணை கடையில் ஒரு கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. இதனால் பொதுமக்கள் அங்கு வந்து தக்காளியை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பிற பகுதிகளிலும் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்பயனாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை மற்றும் கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில் நேற்று முதல் தக்காளி விற்பனை தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் வரிசையில் நின்று தக்காளி பழங்களை வாங்கி சென்றனர்.

ஒரு நபருக்கு அரை கிலோ

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் 8 ரேஷன் கடைகளிலும், கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் 7 ரேஷன் கடைகளிலும் என மொத்தம் 15 ரேஷன் கடைகளில் நேற்று முதல் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

நேற்று தக்காளி பழங்கள் ஒவ்வொரு கடைக்கும் குறைந்த அளவே அதாவது கடைக்கு 15 கிலோ அளவில் வழங்கப்பட்டது. இதையடுத்து ஒரு நபருக்கு அரை கிலோ வீதம் தக்காளி வழங்கப்பட்டது.

இன்று (புதன்கிழமை) முதல் கடைகளுக்கு அதிக தக்காளி விற்பனைக்கு அனுப்புவதோடு, பொதுமக்களுக்கு கூடுதலாக தக்காளி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story