15 ஆயிரம் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார்
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் 15 ஆயிரம் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் 15 ஆயிரம் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
தென்னங்கன்றுகள்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை மற்றும் தென்னை சார் ஊடுபயிர்களில் ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இது மட்டுமல்லாமல் தரமான தென்னங்கன்றுகள் மற்றும் தென்னைக்கு தேவையான இடுப்பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தால் வெளியிடப்பட்ட ஆழியார் (சி.என்.) 1 என்ற அரசம்பட்டி ரக நாட்டு தென்னங்கன்றுகள் தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
அரசம்பட்டி ரகம் நடவு செய்த 4 முதல் 4½ ஆண்டுகளில் காய்க்க தொடங்கும். நீள்வட்டமான நடுத்தர அளவிலான காய்களை கொண்டிருக்கும் தரம் ஒன்றுக்கு ஆண்டிற்கு சராசரி மகசூலாக சுமார் 130 முதல் 140 காய்கள் வரை கிடைக்கும். மேலும் இந்த ரகம் வறட்சியை தாங்கி வளரும் தன்மையை கொண்டது.
விலை விபரம்
ஒரு நெட்டை தென்னங்கன்றுகளையும் தென்னை ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளுக்கு உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. மேற்கு கடற்கரை நெட்டை ரகம் நட்ட 5 ஆண்டுகளில் காய்ப்பிற்கு வருகிறது. மேலும் ஒரு ஆண்டிற்கு சுமார் 130 முதல் 140 காய்கள் ஒரு மரத்தில் இருந்து கிடைக்கும். இந்த ரகம் அதிகமாக கொப்பரை தேங்காய் மகசூலும், அதிக எண்ணெய் சத்தும் கொண்டு உள்ளது.
ஆழியாறு-1 எனப்படும் அரசம்பட்டி நெட்டை மற்றும் பொள்ளாச்சி நெட்டை எனப்படும் மேற்கு கடற்கரை நெட்டை தென்னங்கன்றின் விலை ரூ.75 ஆகும். மொத்தம் 15 ஆயிரம் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. தென்னங்கன்று தேவைப்படும் விவசாயிகள் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது 04253-288722 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ பெற்று பயன் பெறலாம். இந்த தகவலை ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் தெரிவித்து உள்ளார்.