மதுரையில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மதுரையில் இருந்து கோவைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட, 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கோவை
மதுரையில் இருந்து கோவைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட, 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி கடத்தல்
ரேஷன் கடைகளில் அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை சிலர் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்க உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குனர் அருண் உத்தரவின்பேரில், கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி ஆலோசனையின்பேரில், துணை சூப்பிரண்டு கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் நேற்று காலை செட்டிப்பாளையம் ரோடு சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள்.
மதுரையில் இருந்து கோவை நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
15 டன் பறிமுதல்
அந்த லாரியில் 300 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. மொத்தம் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரான சிவகங்கையை சேர்ந்த முனியாண்டி (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், மதுரையை சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவர் இந்த கடத்தல் அரிசியை கோவைக்கு கொண்டு செல்லுமாறும், கோவையில் ஒரு நபரை தொடர்பு கொண்டு ரேஷன் அரிசியை ஒப்படைக்குமாறும் தெரிவித்ததால் கடத்தி வந்ததாக டிரைவர் முனியாண்டி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சத்திய மூர்த்தி மற்றும் கோவையில் உள்ள நபர் யார்? என்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கைதான முனியாண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.