கேரளாவுக்கு கடத்த முயன்ற15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரிசி கடத்தல்

குமரி மாவட்டத்தில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க குமரி-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் கடத்தல் அரிசியை பறிமுதல் செய்வதோடு கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் களியக்காவிளை அருகே உள்ள கோழிவிளை சோதனை சாவடி வழியாக ஒரு லாரி கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் லாரியை மடக்கி நிறுத்தினர்.

15 டன் ரேஷன் அரிசி

உடனே லாரியை டிரைவர் சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனையிட்ட போது அதில் மூடை மூடையாக 15 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் லாரியுடன் அரிசிைய பறிமுதல் செய்தனர். அரிசியை காப்புகாடு அரசு குடோனிலும், லாரியை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story