பயன்பாட்டுக்கு வராமல் உள்ள15 புதிய தள்ளுவண்டிகள்


பயன்பாட்டுக்கு வராமல் உள்ள15 புதிய தள்ளுவண்டிகள்
x
திருப்பூர்


உடுமலை நகராட்சி அலுவலகத்தில் காட்சி பொருளாக 15 தள்ளுவண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை உரிய பயனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காய்கறி தள்ளு வண்டி கடைகள்

ஏழை-எளிய நடுத்தர வர்க்கத்தினர் மலிவான விலையில் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை பெற்று பயன் அடைவதற்கு சிறு மற்றும் சில்லறை வியாபாரிகள் பெரிதும் உதவிகரமாக உள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்களுக்கு கைகொடுத்து உதவும் வகையில் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உடுமலை நகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக தள்ளு வண்டிகள் வாங்கப்பட்டு உள்ளது. இந்த தள்ளு வண்டிகள் பயனாளிகளுக்கு வழங்காமல் மாத கணக்கில் அலுவலக வளாகத்தில் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

வீணாகும் நிலை

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பயனாளிகளுக்காக அளிக்கப்படுகின்ற எந்த ஒரு திட்டத்தையும் உடனடியாக செயல்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கடமையாகும். உரிய காலத்தில் கொடுத்து உதவினால் அவர்களும் உரிய முறையில் பயன் அடைவார்கள் வாழ்வாதாரமும் உயரும். ஆனால் உடுமலை நகராட்சியில் பயனாளிகளுக்கு அளிப்பதற்காக வாங்கப்பட்ட சுமார் 15 தள்ளுவண்டிகள் பல மாதங்களாக காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதுபயன்பாடு இல்லாமல் ஒரே இடத்தில் நிறுத்தி உள்ளதால் அவை வெயில்,மழை போன்ற இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடைந்து வருகிறது. இதனால் பயனாளியை சென்றடையும் முன்பு சேதமடையும் நிலை ஏற்பட்டு உள்ளதால் வரிப்பணமும் வீணாகும் சூழல் நிலவுகிறது. தள்ளு வண்டிகள் வாங்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் என்ன காரணத்திற்காக பயனாளிகளுக்கு வழங்காமல் உள்ளது.

பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்

அந்த தள்ளு வண்டிகள் யாருடைய உத்தரவு மற்றும் வருகைக்காக காத்திருக்கிறது என்பதும் தெரியவில்லை. இயற்கை சீற்றத்தால் பழுதடைந்த பின்பு அதைப்பெற்று பயனாளிகள் எவ்வாறு பயன்படுத்த முடியும்.

இதனால் பாதிக்கப்படுவது அவர்களது தொழிலும் வாழ்வாதாரமும் ஆகும்.

எனவே வியாபாரிகள் நலனில் அக்கறை கொண்டு உடுமலை நகராட்சி வளாக அலுவலகத்தில் காட்சி பொருளாக உள்ள தள்ளு வண்டிகளை உடனடியாக பயனாளிகளுக்கு வழங்குவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story