போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 150 பேர் கைது


போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 150 பேர் கைது
x

போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 150 பேர் கைது

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட ஆஸ்பத்திரியை இடம் மாற்றுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட ஆஸ்பத்திரி

நாகை அருகே உள்ள ஒரத்தூரில் புதிய ஆஸ்பத்திரியுடன் கூடிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டது. இதில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் ஆஸ்பத்திரியின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நாகையில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரியில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

ஒரத்தூரில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் பணிகள், ஒவ்வொன்றாக நிறைவடைந்து வருவதால் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளது.

இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

நாகையில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரி, வேதாரண்யத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி வேதாரண்யத்துக்கு சென்றால் நாகை நகரில் அரசு ஆஸ்பத்திரி இல்லாத நிலை ஏற்படும். இதனால் சிகிச்சைக்காக 10 கிலோ மீட்டர் தூரம் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். இதனால் நாகை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே மாவட்ட ஆஸ்பத்திரியை வேதாரண்யத்துக்கு மாற்றுவதற்கு நாகை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பா.ஜ.க.வினர் போராட்டம்

நாகை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்காலிக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு முன்பு பா.ஜ.க. சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தேசியக்குழு உறுப்பினர் தங்க.வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட அறிவுறுத்தினார். இதனால் பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பி பா.ஜ.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

150 பேர் கைது

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 150 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story