150 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்து கேரள பெண்ணை கரம்பிடித்த கோவை வாலிபர்


150 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்து கேரள பெண்ணை கரம்பிடித்த கோவை வாலிபர்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்களிடையே உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் இருந்து குருவாயூர் வரை 150 கி.மீ சைக்கிள் பயணம் செய்து கேரள பெண்ணை கோவை வாலிபர் கரம் பிடித்தார்.

கோயம்புத்தூர்

பேரூர்

இளைஞர்களிடையே உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் இருந்து குருவாயூர் வரை 150 கி.மீ சைக்கிள் பயணம் செய்து கேரள பெண்ணை கோவை வாலிபர் கரம் பிடித்தார்.

இந்த ருசிகர சம்பவம் குறித்து விவரம் வருமாறு:-

என்ஜினீயர்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த கலிக்கநாய்க்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவசூர்யா (வயது 28). என்ஜினீயரான இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிவசூர்யா சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்தும், ஆரோக்கியமான இந்தியா, பசுமை இந்தியா குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் சிவசூர்யாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுடன் சிவசூர்யாவுக்கு நிச்சயம் செய்தனர். இதனைத்தொடர்ந்து, இருவீட்டாரும் கூடி பேசி திருமணத்தை குருவாயூர் கோவிலில் நடத்துவதற்கு முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை விமர்சையாக செய்து வந்தனர்.

150 கி.மீ. சைக்கிள் பயணம்

இந்த நிலையில் திருமணத்திற்கு மணமகன் சிவசூர்யா காரிலோ, அல்லது பஸ்சிலோ செல்லவில்லை. மாறாக கோவையில் இருந்து குருவாயூர் வரை 150 கி.மீட்டர் சைக்கிளிலேயே பயணம் செய்தார். அப்போது அவர் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அடங்கிய வாசகங்களை சைக்கிளில் வைத்திருந்தார்.

இதற்காக அவர் நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். அவருடன் அவரது நண்பர்களும் சைக்கிளில் சென்றனர். கோவையில் இருந்து கோவைப்புதூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக குருவாயூருக்கு மதியம் 2.45 மணிக்கு சென்றடைந்தார். கோவையில் இருந்து குருவாயூர் வரை 150 கி.மீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணித்தார்.

கேரள பெண்ணை கரம்பிடித்தார்

நேற்று காலை 10 மணிக்கு குருவாயூர் கோவிலில் வைத்து மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் சிவசூர்யா-அஞ்சனாவுக்கு திருமணம் நடந்தது. மணமக்களை உறவினர்கள் வாழ்த்தினர்.

இதுகுறித்து சிவசூர்யா கூறியதாவது:-

உடல் ஆரோக்கியம்

எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அனைவரும் அக்கறை எடுத்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு கூட ஆரோக்கியமான இந்தியா, பசுமை இந்தியா என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சைக்கிள்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் முதல் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வரை 10 நாட்களில் பல்வேறு மாநிலங்களை கடந்து, 1,902 கி.மீ தனியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டேன்.எனது திருமணத்தன்றும் நான் காரில் செல்வதற்கு பதிலாக சைக்கிளிலேயே செல்ல திட்டமிட்டேன். அதன்படியே திருமண நாளான நேற்று முன்தினம் நான் சைக்கிளில் கேரளாவுக்கு பயணித்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story