கோவை மாநகரில் 1,500 போலீசார் பாதுகாப்பு
போலீஸ்காரர் செல்வராஜ் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை
போலீஸ்காரர் செல்வராஜ் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவையில் கலவரம்
கோவை உக்கடம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றிய செல்வராஜ் கடந்த 1997-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி உக்கடம் பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதற்கு அடுத்த நாள் கோவையில் கலவரம் ஏற்பட்டது. கடைகள் சூறையாடப்பட்டன. கலவரத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பதற்றம் உருவானது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 29-ந் தேதி போலீஸ்காரர் செல்வராஜ் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டும் போலீஸ்காரர் செல்வராஜ் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு
உக்கடம், கோட்டைமேடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக அதிரடிப்படை போலீசார், சிறப்பு படை போலீசார் உள்ளிட்டோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கோவை சுங்கம், கோட்டைமேடு, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், சுந்தராபுரம், உக்கடம் உள்ளிட்ட இடங்களில் போலீசர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
வருகிற 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகும். எனவே கோவை நகரம் மற்றும் புற நகர் பகுதியில் வருகிற 7-ந் தேதி வரை போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.