தமிழகத்தில் 15,000+ காலிப் பணியிடங்களை நடப்பு ஆண்டிலேயே நிரப்ப வேண்டும் - தமிழக காங். வலியுறுத்தல்


தமிழகத்தில் 15,000+ காலிப் பணியிடங்களை நடப்பு ஆண்டிலேயே நிரப்ப வேண்டும் - தமிழக காங். வலியுறுத்தல்
x

தமிழகத்தில் 15,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை அறிவித்து, அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்த வேண்டும்

சென்னை,

தமிழகத்தில் 15,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை அறிவித்து, அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் 7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு 8 மாதங்கள் கழித்து 24.3.2023 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டது. பின்னர் 3,000 காலிப் பணியிடங்கள் அதிகரித்து 10,748 என அறிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் இந்த தேர்வுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10 ஆயிரம் என்ற அளவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், கரோனா தொற்று காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டிற்கு பிறகு 3 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எந்த தேர்வும் நடத்தப்படாததால் போட்டி தேர்வாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று தேர்வு எழுதியவர்கள் டி.என்.பி.எஸ்.சி.க்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், இந்த பணியிடங்களை 20,000 முதல் 30,000 வரை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகள் கழித்து தேர்வு நடத்தப்படுவதால் குறைந்தது 20,000 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த தேர்வாளர்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் 7,301 காலிப் பணியிடங்களை மட்டுமே அறிவித்தது மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

கடந்த மாதம் 3,000 காலிப் பணியிடங்களை சேர்த்து 10,748 காலிப் பணியிடங்கள் என அறிவித்தது போதுமானதாக இல்லை. இந்தப் பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கூறியது மிகுந்த ஆறுதலைத் தருகிறது.

ஏற்கெனவே சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டபடி ஆவின், மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுடன் மேலும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் காலிப் பணியிடங்களையும் சேர்த்து 15,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை அறிவித்து அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்த தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இதன்மூலம் வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு அரிய வாய்ப்பாக இந்த நடவடிக்கை இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்


Next Story