சேலம் மாவட்டத்தில் 1,541 மையங்களில் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்-விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்


சேலம் மாவட்டத்தில் 1,541 மையங்களில் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்-விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

சேலம் மாவட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் 1,541 மையங்களில் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.

சேலம்

7.13 லட்சம் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் முதற்கட்டமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக கடந்த 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடைபெற்றது.

இதன் மூலம் மொத்தம் 7 லட்சத்து 13 ஆயிரத்து 662 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அந்த குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

சிறப்பு முகாம்

இதற்கிடையே 2 முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் நேற்று மாவட்டத்தில் 1,541 மையங்களில் சிறப்பு முகாம் தொடங்கியது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த முகாமுக்கு விடுபட்டவர்கள் பலர் வந்து அதிகாரிகளிடம் விண்ணப்பங்களை வழங்கி பதிவு செய்து கொண்டனர். இதனால் முகாம்களில் கூட்டம் ஓரளவு இருந்தது.

இந்த முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது என்றும், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story